வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகள் நவ.11-ம் தேதி ஆர்ப்பாட்டம்…!
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் இம்மாதம் நவம்பர் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருகிற 11ம் தேதி போராட்டம் நடத்த திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும் என்று திமுக , காங்கிரஸ் உள்பட 12 கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்-க்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.,வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு பா.ஜ.க. அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முயன்றிருப்பதோடு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் S.I.R திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக – விவசாயிகளாக இருப்பதால், படிவத்தை பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர். எனவே, இந்த S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி ‘மதசாரபற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் வருகிற 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.