Rock Fort Times
Online News

8-வது ஊதியக் குழுவுக்கு அரசு ஒப்புதல்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்கிறது!

8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று( அக்.28)ஒப்புதல் அளித்தது.மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் அமைக்கப்படுவதாக ஜனவரி, 2025ல் அரசு அறிவித்தது. அதன்படி, 8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 8 வது ஊதிய குழு தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும். மேலும் இந்த அமலாக்கம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். மேலும், மாநில அரசுகள் இந்த பரிந்துரைகளை முழுவதும் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று கடந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்கின. அதே போன்று தற்போதும் மாநில அரசு ஊழியர்களும் மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்