கரூர் செல்ல அனுமதி கிடைக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறும் விஜய்…!
கரூர் பிரச்சார கூட்டத்தின்போது உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். கடந்த செப்.27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் இரவே, தனி விமானத்தில் சென்னைக்கு சென்ற விஜய், வீடியோ கால் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும், காவல்துறையின் அனுமதி பெற்று விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக அவர்களிடம் கூறினார். அதன்படி, அக்டோபர் 17ம் தேதி விஜய் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண தொகையை வழங்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அடுத்த நாளே அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு, விஜய் கரூருக்கு செல்ல காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று(அக்.27) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்து வருகிறார். இதற்காக, மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிக்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 35 குடும்பங்களைச் சேர்ந்த 235 பேர் அங்கு வருகை புரிந்துள்ளனர். காலை 8 மணியளவிலேயே ஹோட்டலுக்குச் சென்ற விஜய், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார். ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.