Rock Fort Times
Online News

திருச்சியில் அமைகிறது, இஎஸ்ஐசி மண்டல துணை அலுவலகம்…- திருச்சி எம்பி துரை வைகோ!

திருச்சியில் இஎஸ்ஐசி மண்டல துணை அலுவலகம் அமைய உள்ளதாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 05.08.2025 அன்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல். மாண்டவியாவை, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான இரு முக்கிய கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அமைச்சரிடம் வழங்கி, அவை குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். அதில் ஒன்று, கடந்த 14.12.2016 அன்று நடைபெற்ற பணியாளர்களுக்கான மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) 206-வது கூட்டத்தில், சேலம் மண்டலத் துணை அலுவலகத்தைப் பிரித்து, திருச்சியில் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்தேன்.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும், இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி, மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது என்றும், மண்டலத் துணை அலுவலகம் அமைப்பது, சுமார் 2.5 லட்சம் பணியாளர்கள் உள்ளிட்ட 10 லட்சம் பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், 12,000 முதல் 15,000 தொழில் நிறுவனங்களுக்கு உரிய சேவைகளை வழங்கவும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டேன். மேலும், டெல்டா பகுதியில் (அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர்) புதிய கிளை அலுவலகங்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவை செயல்படுத்தப்படவில்லை. இம்மாவட்டங்கள் திருச்சி மண்டலத் துணை அலுவலகத்தின் கீழ் வருவதால், திருச்சியில் மண்டலத் துணை அலுவலகம் அமைப்பது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினேன். அதன்பின், புதுடெல்லியில் உள்ள பன்ச்தீப் பவனில் அமைந்துள்ள பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் இயக்குநர் (பொது) அசோக்குமார் சிங், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சுஸ்ரீ ஷோபா கரந்த்லஜே ஆகியோரையும் சந்தித்து முறையிட்டேன். அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் இயக்குநர் ஆகிய மூவரும், இக் கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் தேவையான நடவடிக்கைக மேற்கொள்வதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று (13.10.2025) இதற்கான அறிவிப்பை வெளியிட்டு விரைவில் சேலம் மண்டலத்திலிருந்து பிரித்து திருச்சி மண்டலத்திற்கு துணை அலுவலகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்