Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலம் முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி கவன ஈர்ப்பு பேரணி…!

திருச்சி, அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க பேரணி நடைபெற்றது. திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அங்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்புகள், உடல் உறுப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சர்வீஸ் சாலை அமைப்பதற்கான ஆணை பெறப்பட்டது. மேலும், சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிதிகளும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சர்வீஸ் சாலை மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சர்வீஸ் சாலை அமைக்க கோரி திருச்சி- காட்டூர் யு.டி.சி.பேருந்து நிறுத்தத்திலிருந்து கைலாஷ் நகர் பேருந்து நிறுத்தம் வரை கையில் பதாகைகளை ஏந்திய படியும், கண்டன கோஷங்களை முழங்கியபடியும் பேரணியாக வந்தனர். இதில் சர்வீஸ் ரோடு மீட்புக் குழுவினர், நகர்நல சங்க நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சர்வீஸ் சாலை அமைக்க கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்