திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் இன்று தீர்ப்பளித்துள்ளார். மேலும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் அவர் உறுதிப்படுத்தினார். திருப்பரங்குன்றம் மலையின் சில பகுதிகள் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என்றும், சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்டு, அந்த மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய பல மனுக்கள் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் எஸ். ஸ்ரீமதி அமர்வில் விசாரித்தனர். இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக அவர் தனியாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று இறுதியாக தீர்ப்பளித்தார். அதில், ஆடு, கோழி பலியிட தடை விதித்து, இதுகுறித்து தேவையெனில் சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார். அதேபோல், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். இந்த தீர்ப்புகள், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால சட்டப்பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய முடிவை எட்டியுள்ளன.

Comments are closed.