தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசாரத்திற்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என த.வெ.க. சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேவேளையில் த.வெ.க. கட்சி நிர்வாகிகளின் குறைபாடுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிநபர் ஆணையமும், சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூட்ட நெரிசலில் உயிரிழந்த பிரித்திக்கின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக இன்று(10-10-2025) உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கரூர் நெரிசல் வழக்கை சென்னை அமர்வு விசாரித்தது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பிரமாணப் பத்திரத்தை பார்த்த பின்னர்தான் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர். விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனடிப்படையில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Comments are closed.