தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு நிதியில், பள்ளி வளாகத்தில் ரூ.34 லட்சம் மதிப்பில் இரு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை ஆடுதுறை பேரூராட்சி பா.ம.க சேர்மன் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கழிப்பறை திறந்து வைத்த பிறகு உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது ஒவ்வொரு கழிப்பறைக்கும் இடையே தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் கழிப்பறை போட்டோவை பதிவிட்டு கமெண்ட் செய்தனர். இந்த விவகாரம் ஆடுதுறை பகுதியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பணியைச் செய்த ஒப்பந்ததாரர் யார், ஏன் இப்படிச் செய்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.