தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பொது பிரிவினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர் என 5 பிரிவுகளில், ஆண் பெண் இருபாலரும், பங்கேற்கும் வகையில் 32 விளையாட்டுக்கள் 37 வகைகளில், மாவட்ட மண்டல அளவில் நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 6-வது நாளான இன்று (அக்.7) பள்ளி மாணவர், மாணவியர் பிரிவுக்கான கைப்பந்து போட்டிகள், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இன்று முதல் 10ம் தேதி வரை மாணவர்களுக்கும், 10 ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து 555 வீரர்கள், 570 வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய பள்ளி மாணவர் பிரிவுக்கான கைப்பந்து போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் மற்றும் விளையாட்டு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.