Rock Fort Times
Online News

கரூர் துயர சம்பவம்: அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடங்கும். இதன்மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதல்வராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதி செய்யப்படும். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகம், கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம். பெருந்துயரம் தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்