நடிகர் எஸ்வி சேகரின் தந்தை பெயரில் சென்னையில் தெரு… முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்! (வீடியோ இணைப்பு)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.9.2025) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி. வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி. வெங்கடராமன் தெரு” என்று பெயர் சூட்டப்பட்டு அதற்கான பெயர் பலகையினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்,
நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தனது தந்தை பெயரில் தெரு அமைத்துக் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் எஸ்வி சேகர் பேசுகையில், எனது தந்தை எந்த கட்சியையும் சாராதவர். அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர். நூறுக்கும் மேற்பட்ட அனாதை உடல்களை எடுத்து அடக்கம் செய்தவர் . கண் தானம் செய்வது குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். தான் இறந்தவுடன் தனது கண்களையும் தானமாக கொடுத்தவர். தனிப்பட்ட ஒருவருக்கு அரசு விழா எடுத்து ஒரு தெருவுக்கு தனது தந்தை பெயரை சூட்டி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் இதனை நாங்கள் மறக்க மாட்டோம். உங்களுடன் நாங்கள் என்றும் துணை நிற்போம். குழந்தைகளுக்கு காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்நாளும் அவர்தான் தமிழக முதலமைச்சராக இருப்பார் என்று கூறினார்.

Comments are closed.