Rock Fort Times
Online News

ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…!

தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று(25-09-2025) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீலா வெங்கடேசன். இவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1997-ம் ஆண்டு செப்டம்பரில் பீகார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பீகாரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேசை பீலா வெங்கடேசன் திருமணம் செய்தார். ராஜேஷ் தமிழ்நாட்டின் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால், பீலா வெங்கடேசனும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறுதல் பெற்று வந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டர், முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி, சுகாதாரத்துறை செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்