Rock Fort Times
Online News

திருச்சியில் பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…!

திருச்சி மாவட்டம், துறையூர் கிழக்கு தெப்பகுளத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதி (வயது 59). இவர் தனது அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவானது பரிந்துரை செய்யப்பட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த 02.08.2010 அன்று, அந்த மனு தொடர்பாக சரஸ்வதி, அப்போது பணியிலிருந்த திருச்சி மாவட்ட உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) திலகமணி என்பவரை அணுகிய போது அவர் சரஸ்வதியிடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷிடம் புகார் கொடுத்தார். அவரது ஆலோசனையின் பேரில் லஞ்சப் பணம் ரூபாய் ஆயிரத்தை திலகமணியிடம் சரஸ்வதி கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று திலகமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து இன்று (18.09.2025) தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய திலக மணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், மற்றொரு பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி தண்டனை பெற்றுதர உதவியாக இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்