அதிகளவு கூட்டம் கூடுவதால் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்கும் விஜய்…* பரப்புரைக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது முதல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சியில் விஜய்யை வரவேற்க த.வெ.க . தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து பிரசாரம் செய்வதற்கான இடத்திற்கு வர சுமார் 5 மணி நேரம் ஆனது. தொடர்ந்து அரியலூரில் பேசிவிட்டு, குன்னம் பகுதியில் வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் சென்றார். ஆனால், பெரம்பலூர் சென்றபோது நள்ளிரவு நேரமானதால் விஜய் அங்கு பேசாமல் சென்றுவிட்டார். இதனால் அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த விஜய், 2 இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். இந்த நிலையில் ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் முடிவு செய்துள்ளார்.விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி தவெகவினர், மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். ஆனால், விஜய் பிரசாரம் செய்ய போலீசார் நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும், நீதிமன்றம் நிர்ணயித்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கக்கோரி முறையிட்ட நிலையில், நாளை( செப்.18) விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

Comments are closed.