அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததால் செங்கோட்டையன் அக்கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த செங்கோட்டையன் கடந்த வாரம் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியதாக கூறப்பட்டது. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகினார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் அவர், டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தை சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகம் பெற்றுள்ள பெருமை என்று எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்தார். அப்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, நாடாளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர். டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கக்கோரி அமித் ஷாவிடம் ஈபிஎஸ் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Comments are closed.