மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சொந்த உபயோகத்திற்கு திருடிய 15 விமான நிலைய மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். வர்த்தக நகரமான மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். வியாபார விஷயமாக மட்டும் அல்லாது சொந்த அலுவல்கள் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து விமானங்கள் மூலம் பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு பறக்கின்றனர். இந்நிலையில் விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதித்து அனுப்புவது வழக்கம். அத்தகைய தருணங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக எண்ணெய் பாட்டில்கள், தேங்காய்கள், மிளகாய் பொடி பாக்கெட்டுகள், பொம்மைகள், சிகரெட் லைட்டர்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். அவை அனைத்தையும் அழிப்பதற்காக அங்குள்ள அறைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இந்த பொருட்களை விமான நிலைய மூத்த அதிகாரிகள் பலர் தங்கள் சொந்த உபயோகங்களுக்கு திருடிச் சென்றிருக்கின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டபோது இந்த நூதன திருட்டைக் கண்டுபிடித்த மேலதிகாரிகள் இதில் ஈடுபட்ட 15 பேரை டிஸ்மிஸ் செய்துள்ளனர்.

Comments are closed.