தமிழகத்தில் புதிய டிஜிபி நியமிக்கும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆக.31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பொறுப்பு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் என்பவரை தமிழக அரசு நியமித்தது. அதற்கான உரிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அவரும் பொறுப்பு டிஜிபியாக தமது பணிகளை துவங்கி உள்ளார். ஆனால் சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வெங்கட்ராமன் 9வது இடத்தில் தான் உள்ளார். அவருக்கு முன்னதாக 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்று விமர்சனங்கள் எழுந்தன. அவரின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய டிஜிபி ஓய்வுபெறும் 3 மாதங்கள் முன்பாகவே தகுதியான புதிய டிஜிபி பெயர்களை யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. தமிழக அரசின் இந்நடவடிக்கை 2015ம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில், யுபிஎஸ்சிக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. புதிய டிஜிபி பதவிக்கான நியமன செயல்முறை நடந்து கொண்டிருப்பதாக தமிழக அரசும் பதில் தெரிவித்து இருந்தது. இந் நிலையில் இந்த வழக்கு இன்று( செப்.8) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், டிஜிபி நியமன நடவடிக்கைகளை யுபிஎஸ்சி ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும். யுபிஎஸ்சி அளித்த பரிந்துரையின் பேரில், வழக்கமான முறையில் டிஜிபியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

Comments are closed.