அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. இதில் மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார். அதில் தொடங்கிய கருத்து மோதல் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது. எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு செங்கோட்டையன் எவ்வித வரவேற்பும் அளிக்கவில்லை. இதனால் அவர்களிடையே மோதல் மேலும் அதிகரித்தது. தன்னை அதிமுகவில் இருந்து ஓரம் கட்டுவதாக எண்ணிய செங்கோட்டையன் நேற்றைய தினம் (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்று ‘கெடு’ விதித்தார். அவ்வாறு அவர் செய்யவில்லை என்றால் அதனை நானே முன்நின்று ஒருங்கிணைப்பேன் என்று தெரிவித்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இன்று (செப்டம்பர் 6) எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல அவர்களது ஆதரவாளர்களான ஈரோடு அதிமுக நிர்வாகிகள் கே.ஏ. சுப்பிரமணியன்,
சென்னை மணி, என்.டி. குறிஞ்சிநாதன், எம்.தேவராஜ், எஸ்.எஸ். ரமேஷ், வேலு, கே.எஸ்.மோகன்குமார் ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.

Comments are closed.