Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள பிரபல காம்ப்ளக்ஸில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு…!

திருச்சி, ஒத்தக்கடை பகுதியில் பிரபலமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த காம்ப்ளக்ஸில் செல்போன் கடைகள் மற்றும் பல்வேறு கடைகள், டிராவல்ஸ் நிறுவனம் போன்றவை உள்ளன. இந்த காம்ப்ளக்ஸ் அருகே பிரபலமான தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை, மாநகராட்சி அலுவலகம் போன்றவையும் அமைந்துள்ளன. இந்த காம்ப்ளக்ஸில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இன்று(28-08-2025) காலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கண்டோன்மென்ட் தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். டிராவல்ஸ் அலுவலகம் என்பதால் அங்கு பலரின் பாஸ்போர்ட், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான ஆவணங்கள் இருந்துள்ளது. அவை அனைத்தும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்