நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அன்னையை தரிசித்து செல்கின்றனர். பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பெருவிழா நாளை ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கிறது. நாளை அன்னையின் கொடி ஏற்றம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை மாலை 5 -45 மணியளவில் தஞ்சை ஆயர் டி.சகாயராஜ் திருக் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நவ நாட்களில் பல்வேறு மொழிகளில் திருப்பலிகள், ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், திவ்ய நற்கருணை ஆசி போன்றவை நடக்கின்றன. அன்னையின் ஆடம்பர தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் நடக்கிறது. செப்டம்பர் 8-ம் தேதி திங்கட்கிழமை அன்னையின் பிறந்தநாள் விழாவும், அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. அன்னையின் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சாரை, சாரையாக பேராலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். பல பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி மாதா சப்பரத்துடன் நடந்து சென்ற வண்ணம் உள்ளனர். திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் பக்தர்கள் குளிக்க தடை:
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் வேளாங்கண்ணி கடலில் நாளை 29-ம் தேதி முதல் 10 நாட்கள் பக்தர்கள் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.