மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டின் போது தொண்டர்களை தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது வழக்கு பாய்ந்தது…!
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சி முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக கட்சிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதன் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆக.21ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். அப்போது மாநாட்டு மேடையில் இருந்து அக்கட்சியின் தலைவர் விஜய் ரேம்ப் வாக் சென்றார்.இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் விஜய் கை அசைத்த படியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு தொண்டர், ரேம்ப் வாக் மேடை மீது ஏறி விஜயை நெருங்க முயன்றார். அவரைச் சுற்றி இருந்த பவுன்சர்கள், அந்த தொண்டரை அலேக்காக தூக்கி வீசினர். இதேபோல பல தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக, பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட தொண்டரான சரத்குமார் என்பவர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், நடிகர் விஜய், அவரின் 10 பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.இந்த வழக்கு தான் நடிகர் விஜய் மீது பதியப்பட்ட முதல் குற்ற வழக்காகும். குற்ற வழக்கு எண்; 346/2025 கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக(A1) நடிகர் விஜய், மற்றவர்களாக பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த மதுரை தவெக மாநாடானது, கூடகோவில் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. எனவே, குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடகோவில் போலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்படுகிறது.
Comments are closed.