அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் “தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் இம்மாதம் ஆகஸ்ட் 23, 24 மற்றும் 25 ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். நேற்று இரவு திருச்சி மேற்கு தொகுதியில் புத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கு வரி போட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது. உறையூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் அதை குடித்த மூவர் உயிரிழந்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் திருச்சி அரசு மருத்துவமனை சிறப்பாக பராமரிக்கப்பட்டுவந்தது. தற்போது பல்வேறுN சீர்கேடுகள் இருப்பதாக செய்தி வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் சட்டம்- ஒழுங்கு சீர்குழையும். திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் திமுக ஆட்சியில் வீடே கட்ட முடியாது. கிரஷர் உரிமையாளர்களிடம் கமிஷன் கேட்கப்படுவதாக தகவல் வருகிறது. அதிமுக ஆட்சி அமைந்த பின் இது குறித்து விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். அந்த அறிவிப்பால் 25 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதற்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு. 2026 ல் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வருகிற சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் அந்த திட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சிவபதி, வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன், முன்னாள் எம்பி டி.ரத்தினவேல், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், எடப்பாடி பழனிசாமிக்கு வேல் பரிசாக வழங்கினார்.
இதேபோல ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
ஸ்ரீரங்கம் தொகுதி, ஜெயலலிதா நின்று வெற்றி பெற்ற தொகுதி. அவரது மறைவிற்கு பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்தோம். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் நிலையை ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி தமிழ்நாட்டில் முன்மாதிரியான தொகுதியாக இருந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் பெறாமல் மாநில அரசின் நிதியுதவி மூலம் மருத்துவ கல்லூரி கட்டினார். நான் முதல்வராக இருந்த போது பாரத பிரதமரிடம் பேசி நிதியுதவி பெற்று மருத்துவ கல்லூரி கட்டினோம். அது தான் திறமை. ஸ்டாலினுக்கு அந்த திறமை இல்லை. செயல் இழந்த அரசாக திமுக அரசு உள்ளது. காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும். ஏற்கனவே, திமுக பாஜக உடன் கூட்டணி வைத்தது. அவர்கள கூட்டணி வைத்தால் பா.ஜ.க நல்ல கட்சி நாங்கள் வைத்தால் கெட்ட கட்சியா ? எங்களுக்கும், பாஜகவிற்கும் திமுக வை வீழ்த்த வேண்டும் என ஒத்த கருத்து உள்ளதால் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.