திருச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிலதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…* அதிமுக ஆட்சி அமைந்த பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ளதால் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி,
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் கடந்த 23ம் தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார் . பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று( ஆகஸ்ட் 25) மாலை மணப்பாறை, திருச்சி மேற்கு, மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்தநிலையில் திருச்சியில் தங்கி உள்ள எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் இன்று சந்தித்து பேசினர். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் தரப்பில், விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி மாவட்டத்தை வாழை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும், தொழில் துறையில் அகில இந்திய அளவில் நடைபெறும் டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், மின் கட்டணம் உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சியில் அதிக தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி,
அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு தனி ஆணையம் அமைக்கப்பட்டு அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்துவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அதை கிடப்பில் போட்டுவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்த பின் கால்நடை பூங்கா முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாத்தது அதிமுக அரசு தான். காவிரி நீரை சுத்தப்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி நடந்தாய் வாழி காவேரி திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற சிபில் ஸ்கோர் பார்க்க கூடாது என முதல்வரிடம் மனு அளித்தேன்.அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதனை ரத்து செய்தது. அதிமுக ஆட்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளோம். விளையாட்டு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலும் விவசாயமும் முக்கியம். இரண்டும் சிறந்தால் தான் தமிழ் வளரும். இரண்டும் சிறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர், செம்மலை, கோகுல இந்திரா, சிவபதி, வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன், மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு .பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.