லால்குடி அருகே சாலை விபத்து: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தார் அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி மாவட்டம், லால்குடி முஸ்லிம் தெரு தேமுட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சந்தோஷ். எலெக்ட்ரிசியன். இவருக்கு சவுதியில் வேலை கிடைத்தது. இதையடுத்து இவர் இன்று (ஆகஸ்ட் 9) துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரில் அவரது குடும்பத்தினரும் இருந்தனர். மற்றொரு காரில் அவரது நண்பர்களான லால்குடி நன்னிலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20), லால்குடி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா (20) உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். சந்தோஷ் குடும்பத்தினர் சென்ற கார் முதலில் வேகமாக சென்று விட்டது. அதனை பின்தொடர்ந்து
நண்பர்கள் பயணம் செய்த கார் சென்று கொண்டு இருந்தது. லால்குடி- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கல்லூரி முன்பு வந்தபோது நண்பர்கள் சென்ற காரும், எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அரவிந்த், சாதிக்பாட்ஷா, மோட்டார் சைக்கிளில் வந்த லால்குடி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் ( 56) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்ததோடு, தைரியமாக இருங்கள் என்று அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த மருத்துவர்களிடம் 24 மணி நேரமும் கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed.