Rock Fort Times
Online News

நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு ரத்து…- * முதல்வர் வெளியிட்ட மாநில கல்விக் கொள்கையில் தகவல்!

2021 – 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்களாகப் பேராசிரியர் இராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம். கிருஷ்ணா, இரா.பாலு, ப்ரீடாஞானராணி, பழனி உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், 650 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) காலை 10.45 மணியளவில் வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட, அதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையானது உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், பிளஸ்-1 பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. “3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும்” எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கோவி செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்