திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியின் 20-வது ஆண்டு விளையாட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கினார். விழாவில் 7 கண்டங்களிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைப் புரிந்த முத்தமிழ்செல்வி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் அதிக புள்ளிகளை பெற்ற அணி வீரர்களுக்கு சுழற்கேடயத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியும், கால மாற்றங்களும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. தற்போது மாணவ, மாணவிகள் தங்களது உடல் பாதுகாப்பை மறந்து செயற்கை உணவுகளையும், சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளையும் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கேற்ப உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதற்கு எளிய உடற்பயிற்சிகளையும், இயற்கையில் விளையக்கூடிய காய்கறிகளையும் உண்டு வந்தால் நன்று. மாணவச் செல்வங்கள் கைபேசியில் விளையாடுவதை தவிர்த்து மைதானத்தில் விளையாடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தற்போது நம் அரசு, விளையாட்டுத்துறைக்கென்று தனி கவனம் செலுத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி விளையாட்டு வீரர்களுக்காக இடஒதுக்கீடு தந்து அவர்களின் படிப்பிற்கும், வேலைவாய்ப்பிற்கும் முன்னுரிமை அளிக்கிறது. நம்முடைய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் கூறுவதுபோல இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது என்ற அவரின் கூற்றை மெய்பிக்கும்விதமாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் மற்றும் இளைஞர்களும் தேசப்பற்று உடையவர்களாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் பேசுகையில், இவ்விழா சிறப்புடன் நடைபெற உறுதுணையாக இருந்த பள்ளியின் துணை முதல்வர் சகோதரர் சுரேஷ் மற்றும் அருட்சகோதரிகள், இருபால் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், இருபால் மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்களின் பேராதரவினால்தான் நம் பள்ளியின் 20-வது ஆண்டு தின விளையாட்டு விழா வெற்றிகரமான நாளாக அமைந்தது என்று அனைவருக்கும் நன்றி கூறி பாராட்டினார்.
Comments are closed.