Rock Fort Times
Online News

ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!

ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தந்து தங்களுக்கு தேவையான  பழங்கள், பச்சரிசி, வெல்லம், வாலரிசி, வாழை இலை, பூக்கள் மற்றும் பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் காந்தி மார்க்கெட் மக்கள் வெள்ளத்தில் திணறியது. காந்தி மார்க்கெட்டுக்கு புதுக்கோட்டை, தேனி, கம்பம் போன்ற ஊர்களில் இருந்து பொதுவாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வாழைத்தார்கள் வருவது வழக்கம். ஆனால், நாளை ஆடி 18 ஐ முன்னிட்டு 15 ஆயிரம் வாழைத்தார்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன. செவ்வாழைத்தார் ரூ.300 முதல் 1000க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.250 முதல் 850 வரை விற்கப்பட்டு வந்தது.பூவன் பழம் தார் 200 முதல் 700 வரை விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 முதல் 650 வரை விற்கப்பட்டு வந்தது. இதேபோன்று பூக்கள் விளையும் கடுமையாக உயர்ந்திருந்தது. செவ்வந்தி கிலோ ரூ300, அரளி ரூ300, விச்சி ரூ150, மல்லிகை ரூ500, கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.600, ஜாதி பூ ரூ.800, சம்மங்கி ரூ.300, பன்னீர் ரோஜா ரூ120 க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று கொய்யாப்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளம்,எலுமிச்சை, வாழை பழங்கள் விலையும் அதிகரித்து இருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்