வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ், ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக கவினின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் அவர்களின் பெயரும் சேர்க்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சுர்ஜித்தின் தந்தை சரவணன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கவினின் வீட்டுக்கு இன்று (ஜூலை 31) காலை சென்ற திமுக பொருளாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கவினின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அப்போது குற்றம் செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கவினின் பெற்றோரிடம் கனிமொழி தெரிவித்தார். மேலும், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாயாரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கவினின் பெற்றோர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.
Comments are closed.