தற்போதைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்களை பார்ப்பது அரிதினும் அரிதாக உள்ளது. அவர்களில் சில இளைஞர்கள், சில இளம் பெண்கள் தங்கள் மொபைல் போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ், கமென்ட்களை அள்ளுகின்றனர். இதற்கு ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை ரீல்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு சாகசம் செய்வது, சற்று தூரத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்திருந்து ரீல்ஸ் எடுப்பது என இளைஞர்கள் “கெத்து” காட்டி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்கும் போது அஜாக்கிரதையால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க ரயில்வே துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அட்ராசிட்டியில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து ரயில்வே போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர். ஆனாலும் இந்த செயல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விதிமுறைகளின்படி ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுக்கக்கூடாது. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால் சிலர் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் ஆகியவற்றில் மொபைல் போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சி.சி.டி.வி., கேமரா மூலம் இதனை கண்காணிப்பார்கள். மீறி ரீல்ஸ் எடுத்தால் ரூ 1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Comments are closed.