Rock Fort Times
Online News

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதில் தவறு கிடையாது, நிபந்தனையும் கிடையாது… * சொல்கிறார் திருநாவுக்கரசர்!

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம், இலக்கியச் செல்வர்
குமரி அனந்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் மாநில இலக்கிய அணி தலைவர் புத்தன் தலைமையில் இன்று( ஜூலை 21) நடந்தது. திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.ரெக்ஸ், கலை, வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்ட இலக்கிய அணி தலைவர் பத்மநாபன் வரவேற்றார். கூட்டத்தில் தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், கலைப்பிரிவு அருள், சீலா செலஸ், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஐடி பிரிவு அரிசி கடை டேவிட், கிளமெண்ட், மனித உரிமை துறை எஸ்.ஆர்.ஆறுமுகம் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சியில் உள்ள சிவாஜி சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் அருணாச்சலம் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக – பாஜக கூட்டணியை விரும்பாததால் அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். எங்கள் கூட்டணிக்கு தான் வந்துள்ளார். பிற மாநிலங்களில் பாஜக, எல்லா கட்சிகளையும் உடைத்துள்ளது என்ற அவருடைய கருத்து சரியானதுதான். காங்கிரசுக்கு ஆட்சியில் இடம் வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது. நிபந்தனையும் கிடையாது. இருப்பது 234 தொகுதிகள் தான். கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப ஒன்று இரண்டு கூடலாம், குறையலாம். இவ்வாறு அவர் கூறினார். மதுரையில் நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாட்டில் ராகுல் காந்தி எம்பி கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு… கதை, கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது. காமராஜர் குறித்து சிவா எம்பி கருத்து தெரிவித்து இருப்பது பற்றி… சிவா கூறிய கருத்திற்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன், அறிக்கை தொடர்பாகவும் கண்டித்து உள்ளேன். சிவா இதுகுறித்து விளக்கம் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் இது குறித்து கருத்து தெரிவித்து விட்டார். அந்த பிரச்சனை முடிந்து விட்டது, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்