Rock Fort Times
Online News

திருச்சியில் திமுக பெண் கவுன்சிலரின் வீட்டை சூறையாடியதாக மாநகராட்சி காண்ட்ராக்டர் உட்பட19 பேர் மீது வழக்கு…!

திருச்சி மாநகராட்சி, 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மூலம் காண்ட்ராக்டர் வேல்முருகன் என்பவர் இந்த பணியினை எடுத்து செய்து வருகிறார். இந்தநிலையில் 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன், சாக்கடை கட்டும் பணிகளை ஆய்வு செய்தபோது சாக்கடை, தனியார் இடத்தில் கட்டப்படுவது தெரிய வந்தது. இதனால், அந்த பணிகளை உடனே நிறுத்துமாறு கூறியுள்ளார். அப்போது மலர்விழி தரப்பினருக்கும், காண்ட்ராக்டர் வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேல்முருகன் மற்றும் அவரது ஆட்கள் மலர்விழியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க மலர்விழி சென்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் போலீசார் அவர் புகாரை வாங்கவில்லை. இந்தநிலையில் நேற்று( ஜூலை 17) மாலை வேல்முருகன் தரப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மலர்விழி ராஜேந்திரன்
வீட்டிற்குச் சென்று அங்கு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மேலும், வீட்டிற்குள் புகுந்து டிவி, ஏர்கூலர்களை நொறுக்கி விட்டு தப்பி சென்றனர். இந்த செயலை கண்டித்தும், புகாரை வாங்க மறுத்த போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்தும் மலர்விழி தரப்பினர் கேகே நகர் முதன்மை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக் காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக கவுன்சிலர் மலர்விழியின் உறவு பெண் நிவேதா என்பவர் கேகே நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மாநகராட்சி காண்ட்ராக்டர் வேல்முருகன் மற்றும் அவருடைய தனியார் நிறுவனத்தின் சூப்பர்வைசர் பிரகாஷ் உள்ளிட்ட 19 பேர் மீது 7 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்