Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்…* காவிரி ஆற்றில் இருந்து தங்க, வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்துவரப்பட்டது!

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் ஜூலை 8-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று( ஜூலை 18) தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி இன்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து காவிரி ஆற்றுக்குச் சென்று 1 தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7-30 மணிக்கு தங்க குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்தும், 28 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க ராஜகோபுரம் வழியாக தாயார் சன்னதிக்கு ஊர்வலமாக காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்களஹாரத்தி நடைபெறுகிறது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் இன்று முழுவதும் மூலவர் சேவை கிடையாது. ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.நாளை ( ஜூலை 19) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன்படி, 19-ந் தேதி காலை 7 மணிக்கு தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்களஹாரத்தி நடைபெறுகிறது. மாலை 3-30 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்