Rock Fort Times
Online News

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: இன்று முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள்…!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று (ஜூலை 16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடை திறப்பையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை மற்றும் தந்திரி தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். நடை திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 30-ந் தேதி நிறை புத்தரி பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு 29-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்