கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் பலி: திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது…!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதற்கு கேட்டை மூடாமல் தூங்கிய ‘கேட்கீப்பர்’ தான் காரணம் என்று ஒரு தரப்பினரும், கேட்டை மூடுவதற்கு முன்பாக திறந்து விடும்படி வேன் டிரைவர் கேட்டுக் கொண்டதால்தான் விபத்து நேரிட்டது என மற்றொரு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த திருச்சி கோட்ட ரயில்வே துறை சார்பில், திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விபத்து தொடர்பாக விசாரிக்க கேட் கீப்பர், ரயில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ஆலம்பாக்கம் ரயில் நிலைய மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள்
2 பேர், ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த தலா ஒரு முதன்மை லோக்கோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த விசாரணை குழு திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு துறைக்கான அலுவலகத்தில் இன்று( ஜூலை 10) தனது விசாரணையை தொடங்கினர். அப்போது கேட் கீப்பர் மற்றும் பள்ளி வேன் ஓட்டுனர் தவிர மற்றவர்கள் ஆஜராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களிடம் ரயில் வருவது முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா?, தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணை முழுமையாக முடிவடைந்ததும் அதன் அறிக்கை ரயில்வே தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
Comments are closed.