சித்திரை மாதத்தில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே பொன்னேர் உழுதலின் நோக்கம். சித்திரை மாதத்தில் செய்யும் உழவை `நல்லேர் பூட்டுதல்’, `புழுதி உழவு’, `கோடை உழவு’ என்றும் சொல்வார்கள். தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ மாடுகளைத் தயார் செய்து விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்த்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல்’ என்று பெயர். பொன்னேர் பூட்டி, நிலங்களை உழுது , நவதானியத்தை விதைப்பார்கள். இதில் முளைத்து வளரும் தானியங்களை கால்நடைகள் உண்ணும். நிலத்தை மீண்டும் விவசாயத்துக்குத் தயார்படுத்துவதில் விவசாயிகள் ஒன்றுகூடி செய்யும் சித்திரை மாத தொடக்க வழிபாட்டுச் சம்பிரதாயமே இதன் நோக்கம். மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து , மாலை போட்டு, விளக்கேற்றி, நெல்லு வைத்து, தேங்காய் பழம் உடைத்து மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி சுவாமி கும்பிடுவர்.ஏரை எடுத்துக் கொண்டு தங்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து வரிசையாக நிறுத்துவார்கள். ஒவ்வொரு விவசாயிகள் வீட்டிலும் இருந்து விதை நெல், கம்பு, சோளம், என்ன விதை இருக்கோ, அதில் ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில் சேகரித்து குலதெய்வ கோயிலில் வைப்பார்கள். ஏர் கலப்பைக்கும், மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளித்து , சூடம் காட்டியதும் வரிசையாக புறப்பட்டு வயலுக்கு சென்று நிலத்திலும் பூஜை செய்து நிலத்தை உழுது சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூவி விடுவார்கள். நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். அதன்படி ,பி.கே. அகரத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு பூஜைகள் செய்துவிட்டு தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்குவா். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என நல்லேர் பூட்டி உழவு செய்தனர்.