Rock Fort Times
Online News

திமுக, பா.ஜ.க.வை கொள்கை எதிரி என கூறும் விஜய் அதிமுக வை பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாதது ஏன்? -திருமாவளவன் கேள்வி!

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கச்சத்தீவு குறித்து ஆட்சியாளர்கள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு தொடர்பாக இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் கூறியது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட தேசத்திற்கு எதிரான கருத்து. இதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். அஜித்குமார் கொலை விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். அவரின் தாயாரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளார். இது சற்று ஆறுதல் தருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் வழக்கம்போல் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என சொல்லி வருகிறார்கள். ஓரணியில் தமிழ்நாடு என்பதை தேசிய அரசியலுடன் கூடிய பார்வையாக தான் பார்க்கிறேன். இது அதிமுகவிற்கோ, அவர்கள் கூட்டணிக்கோ எதிரானது என்பதை விட சனாதான சக்திகளுக்கு எதிராக, சங்பரிவார சக்திகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், தமிழக மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்கிற பொருளில் கூறுவதாக தான் விசிக புரிந்து கொள்கிறது. பா.ம.க இரண்டாக பிரிய வாய்ப்பில்லை. அப்பாவும், மகனும் ஒரு கட்டத்தில் சேர்ந்து தேர்தலை ஒன்றாக சந்திப்பார்கள் என நம்புகிறேன். அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்கு பின் தான் முடிவெடுக்கப்படும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தான் கருத்து கூற வேண்டும். திமுக, பா.ஜ.க வை கொள்கை எதிரி என கூறும் விஜய் அதிமுக வை பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாதது ஏன்? என்கிற கேள்வி எழுகிறது. அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா?. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், சக்தி, ஆற்றல் அரசு, முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புச்செல்வம், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்