திருச்சி பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை அணுகு சாலை அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை வைகோ எம்பி பங்கேற்பு!
திருச்சி -தஞ்சை சாலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரை இருபுறமும் அணுகுசாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பினர் விடுத்து வரும் நீண்டகால கோரிக்கையாகும். இதனை நிறைவேற்றுவதற்காக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் போராடி வருகின்றனர். அப்பகுதியை விபத்தில்லாத பகுதியாக மாற்றுவதற்கு துரை வைகோ, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கடந்த ஜூன் 29 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முதல் நிலைச் செயலர் மருத்துவர் பி.உமாநாத்தை சந்தித்து, அணுகுசாலை அமைப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பினருடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அணுகுசாலை அமைக்கும் பணிகளை தொடங்கிட வலியுறுத்தும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை வைகோ, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், மண்டலக் குழு தலைவர் மு. மதிவாணன் , தேசிய நெடுஞ்சாலைத்துறை பொது மேலாளர் (தொழில்நுட்பம்) மற்றும் திட்ட இயக்குனர் செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள், பால்பண்ணை அணுகுசாலை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அணுகு சாலையின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
Comments are closed.