சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை மாவட்டத்தை, ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடைநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.