Rock Fort Times
Online News

மதசார்பின்மை காப்போம் மாநாடு-திருச்சியில் நாளை நடக்கிறது…- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பரபர பேட்டி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை ( ஜூன்.14 ) திருச்சியில் ” மதச்சார்பின்மை காப்போம் ” பேரணி நடைபெற உள்ளது. இப் பேரணியில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி வந்துள்ள கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது.,

அகில இந்திய அளவில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு கோட்பாட்டை காக்க வேண்டும் என்று அரைகூவல் விடுவதற்காகத்தான் எங்கள் கட்சி சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. நாளை மாலை 4 மணி அளவில் திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே தொடங்கும் இப்பேரணி, டிவிஎஸ் டோல்கேட் ரவுண்டானா, மகாத்மா காந்தி சிலை, பெரும்பிடுகு முத்தரையர் சிலை ஆகியவற்றை கடந்து மாநகராட்சி அலுவலகம் அருகே முடிவடைகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். முத்தலாக், வக்பு திருத்த சட்டம், மதசார்பின்மைக்கு மற்றும் அரசமைப்புக்கு எதிரானது. அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இப்பேரணி நடைபெறுகிறது. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை நடத்தப் போகின்ற பேரணியின் முக்கிய நோக்கமாகும். இப்பேரணியில் கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கானவர்களின் பாதுகாப்பு நலன் கருதி 3 மருத்துவ குழுக்களும், 300 தன்னார்வ பணியாளர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கும் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் தேர்தலை மையப்படுத்தி பேரணியை நடத்த திட்டமிடவில்லை. இப் பேரணி ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் என தெரிவித்தார். இப்பேட்டியின்போது போது தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், முதன்மை செயலாளர் பாவரசு, திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயலாளரும் திருச்சி மாமன்ற உறுப்பினருமான என்.பிரபாகரன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்