திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு குழுமிக்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு…! * மாநகராட்சி ஆணையர் சரவணன் நடவடிக்கை எடுப்பாரா?
திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு, அப்பல்லோ ஆஸ்பத்திரி செல்லும் வழியில் குழுமிக் கரை மெயின்ரோடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள
உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையின் இருபுறமும் கழிவுகள் அதிகளவு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. குறிப்பாக இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள், ரசாயன கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால் அவைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. மாலை மற்றும் இரவு நேரங்களில் லாரிகளை நிறுத்திக் கொண்டு செப்டிக் டேங்க் கழிவுகளும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் திறந்து விடப்படுகின்றன. இதனால், இந்த தண்ணீரை பயன்படுத்துவோருக்கு உடலில் அரிப்பு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதி ஒதுக்கு புறமான பகுதியாக இருப்பதால் இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. இந்தப் பகுதியில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த ரோடு வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்த விஷயத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் உரிய கவனம் செலுத்தி குழுமிக்கரை ரோடு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், இனிமேல் இப்பகுதியில் கழிவுகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.