திருச்சி, கே.கே.நகரில் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன் மற்றும் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து இன்று( ஜூன் 12) தமிழக முதல்வரால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல தூர் வாரும் பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறப்படும் தகவல் உண்மையில்லை. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மணல் கலந்து வந்தது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் திட்டங்களை அமைச்சராகிய நீங்கள் வேறு தொகுதிக்கு மாற்றி விடுவதாக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி குற்றச்சாட்டி உள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் கூறுவதில் உண்மை இல்லை அவர் சொல்வது போல எந்தத் திட்டத்தையும் மாற்ற முடியாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியினர், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வருவார்கள் என அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள். இதுவரை அவர்களால் தங்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை. எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை இழுக்கும் முயற்சியில் எல்.முருகன் ஈடுபடுகிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றனரே? என்ற கேள்விக்கு இதனை முதல்வர் பார்த்துக் கொள்வார் என்றார்.
Comments are closed.