விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். காரியாப்பட்டி அருகே உள்ள வடகரையில் செயல்பட்டு வரும் ராஜா சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வழக்கம்போல இன்று (ஜூன் 11) சுமார் 100 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 அறைகள் தரைமட்டமாகின. இதில், 2 பெண் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பேச்சியம்மாள், மற்றொருவர் கருப்பையா என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஒருவரின் உடலை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் காரியாப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசாயனக் கலவையின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இதுபோல பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.ஆகவே, அரசு முறையான வழிகாட்டுதல்களை வழங்கி உயிரிழப்புகளை தடுக்க முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.