பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி குத்திக்கொலை- சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்ந்ததால் காதலன் வெறிச்செயல்…!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், நிதி நிறுவன ஊழியரான பிரவீன் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே கல்லூரி மாணவி, தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது பிரவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேட்டபோது பிரவீனுக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கல்லூரி மாணவியின் வீட்டிற்குள் நுழைந்த பிரவீன், வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை சரமாரியாக கத்தியால் குத்தினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் பிரவீன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பிரவீன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.