முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 31ல் மதுரை செல்ல உள்ள நிலையில் அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளராக பதவி வகித்து வந்த பொன்.வசந்த், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் ஆவார். 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன்னுடைய மனைவி இந்திராணியை மேயர் தேர்தலில் நிறுத்தினார். இந்திராணி பட்டப்படிப்பு முடித்துள்ளார். மிசா பாண்டியன் மனைவி பாண்டிச்செல்வி, முருகன் மனைவி பாமா ஆகியோர் பிடிஆர் தியாகராஜன் எப்படியும் தங்களைத்தான் மேயர் பதவிக்கு சிபாரிசு செய்வார் என்று நம்பி இருந்தனர். இறுதியில், இந்திராணியை பிடிஆர் தரப்பினர் சிபாரிசு செய்ததன் பேரில் தலைமை அறிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.இதற்கு காரணம், மதுரை மாவட்ட திமுகவில் கட்சி பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதியாகவும் முக்குலத்தோரில் ஒரு உட்பிரிவான பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததாலும்தான், இப்படியொரு வாய்ப்பு இந்திராணிக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இது அப்போதே கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இறுதியில், திமுக மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி மதுரை மாநகராட்சியின் 8-வது மேயரானார். பதவி பிரமாணத்தில் பங்கேற்க பிடிஆர் சென்னையில் இருந்து, மதுரைக்கு வந்து கலந்து கொண்டதுடன், செங்கோல் கொடுத்து வாழ்த்து கூறியிருந்ததும் நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் மேயரின் கணவர் பொன் வசந்த் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் மே 31ல் மதுரை பயணிக்க உள்ள நிலையில், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான பொன் வசந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேயரின் கணவர் பொன்வசந்த் மீது, வீடு கட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதி என பல விஷயங்களில் புகார்கள் மேலிடத்துக்கு சென்றவண்ணம் இருந்தன.அதாவது ஒரு மேயர் போலவே பொன்வசந்த் செயல்படுவதாக தலைமைக்கு அடிக்கடி புகார்கள் சென்றுள்ளது. இதனிடையே, மதுரையில் ஜூன் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடக்கிறது. அதை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கடந்த மே 23ல் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தனர். ஆனால் அதே நாள், அதே நேரத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அப்படியிருந்தும்கூட, அதிமுக ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களையும் நிறைவேற்றினார் மேயர் இந்திராணி. மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன்வசந்த் உள்ளதாக புகார்கள் எழுந்தன. இப்பப்பட்ட சூழலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன் வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ள சம்பவம் மதுரையில் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது,
Comments are closed.