முசிறி அருகே மீன்பிடி திருவிழா: பொதுமக்கள் விரித்த வலையில் சிக்கிய கெண்டை, விரால் மீன்கள்…!( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தில் சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த ஏரியில் பெருமளவு சேகரிக்கப்படும் தண்ணீரால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பாசன ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் ஏரியில் கிராம மக்கள் மீன் பிடி திருவிழா நடத்திட முடிவு செய்தனர். இதையடுத்து இன்று (15-05-2025) திருத்தலையூர், மேலகொட்டம், பேரூர், கண்ணனூர், பாளையம், ஜெம்புநாதபுரம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் காலை முதலே மீன்பிடி வலைகளுடன் ஏரியில் குவிந்தனர். பின்னர் கிராமத் தலைவர் கொடி அசைத்தவுடன் பொதுமக்கள் ஆரவாரத்துடன் ஏரியில் இறங்கி மீன்பிடித்தனர். கத்தா, சுருக்குவலை, அரிவலை, கொசு வலை ஆகியவற்றின் உதவியோடு பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர். சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஏரியில் மீன் பிடித்தனர். பொதுமக்கள் விரித்த வலையில் கெண்டை, கெளுத்தி, சர்க்கார், விரால், சங்கரா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது . வருடந்தோறும் நடைபெறும் மீன்பிடி திருவிழாவில் இந்த வருடம் கடந்த வருடத்தை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Comments are closed.