கடந்த 2017 – 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரி, 285 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 342 ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி, ஜிஎஸ்டி ஆணையரகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதுதொடர்பான மனுவில், மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம், தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கும். உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அந்த சிக்னல்களை நுகர்வோர்களுக்கு வழங்குகின்றனர். நுகர்வோர்களிடமிருந்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்வசூலிக்கும் தொகையில், அரசு கேபிள் டிவி கழகம், சம வருமானத்தை பெறுகிறது. அதற்கான ஜிஎஸ்டி வரி, எந்த பாக்கியும் இல்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். அதற்கு அரசு கேபிள் டிவி கழகம் பொறுப்பாகாது என்பதால், 285 கோடி ரூபாய் வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை, அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது.. மேலும் ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த நோட்டீசுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 285 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்
Comments are closed.