கடந்த ஏப்ரல் 21ம் தேதி காஷ்மீரின் பகல்ஹாமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்திய துப்பாக்கி சூடு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்ச சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தி பாகிஸ்தானின் நீர் வளத்தில் கை வைத்தது. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்துசெய்துள்ளது.இந்நிலையில் சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன ? அது ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் ? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காள மக்கள், பாகிஸ்தான் அரசு தங்களின் பகுதி வளர்ச்சிக்கு நிதி குறைவாக தருகிறது, வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை,அரசியல் அதிகாரம் தரப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தினர். இது வங்கதேச சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டமாக மாற, இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி வங்கப்படைகள் வென்று வங்கதேசம் உருவானது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1971ம் ஆண்டு இந்த போர் நடந்தது. இந்த போரின் முடிவில் இந்தியா 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை போர் கைதிகளாக சிறை வைத்தது. பாகிஸ்தான் நிலப்பரப்பில் ஐயாயிரம் சதுர மைல்களை இந்தியா தன்வசப்படுத்தியது.
இதனால் கொதித்து எழுந்த பாகிஸ்தான், இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் தாக்குதல்களை நடத்த தொடங்கியது. குறிப்பாக, கராச்சி, காஷ்மீர் எல்லைகளில் இரண்டு நாடுகள் இடையேயும் போர் பதற்றம் நிலவ ஆரம்பித்தது. இந்தியா பக்கம் சோவித் ஒன்றியமும், பாகிஸ்தான் பக்கம் சீனாவும் துணை நிற்க மற்றும் ஒரு போருக்கு வழிவகுக்கும் ஆபத்து ஏற்பட்டது. இந்த போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியது. சிம்லாவில் இருநாட்டு தலைவர்களும் இணைந்து உரையாடி எல்லை பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என ” சிம்லா ஒப்பந்தம் ‘கொண்டுவரப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த சுல் பீகர் அலி பூட்டோ மற்றும் இந்திய பிரதமரான இந்திரா காந்தி ஆகியோர் இதில் கையெழுத்திட, 1972ம் ஆண்டு ஜூலை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை பரஸ்பரத்துடன் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். காஷ்மீர், கராச்சி உள்ளிட்ட எல்லை பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான விவகாரங்களில் இருநாட்டின் ஒப்புதல் இன்றி வேறு எந்த நாடும் மூன்றாவதாக இடையில் தலையிடக்கூடாது. இரண்டு நாடுகளும் நாட்டின் கொள்கை, உள்நாட்டு விவகாரங்கள், அரசியல் இறையாண்மைகளில் தலையிடக்கூடாது. ஒரு நாடு இன்னொரு நாட்டை பற்றி தவறான புண்படும்படியான கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி பல முக்கியமான இருநாட்டு எல்லை பிரச்சினைகள், எல்லையில் போர் பதற்றங்கள், ஆக்கிரமிப்புகள் ஆகியவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இந்த முக்கிய ஒப்பந்தம் ரத்தால், இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையில் மூன்றாவதாக எந்த நாடும் தலையிட கூடும். இதுவரை மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவி வந்த சீனா, இனி நேரடியாக பாகிஸ்தான் – இந்தியா எல்லை பிரச்சினைகளில் தலையிடும். இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில உலக நாடுகள் ஆதரவு தர போர் பதற்றம் நிலவும்.
Comments are closed.