ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்ஹாமில் உள்ள பைசாரா பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்கால நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை இந்தியா விதித்துள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சிம்லா ஒப்பந்தம் நிறுத்தம், பாகிஸ்தான் வான் வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை , வாகா எல்லையில் போக்குவரத்து தடை, இந்தியாவுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Comments are closed.