திருச்சி, மாநகராட்சி உறையூர், மின்னப்பன் தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் ( ஏப்.19 )அப்பகுதியை சேர்ந்த லதா மருதாம்பாள், பிரியங்கா என்ற 4 வயது சிறுமி ஆகிய மூன்று பேர் திடீரென இறந்துள்ளனர். இவர்களின் இறப்பிற்கு குடிநீரில் கழிவு நீர் கலந்தது தான் காரணம் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருச்சி உறையூரில் உயிரிழந்த மூவரின் இறப்பிற்கு, கழிவுநீர் கலப்பு காரணம் அல்ல என, திருச்சி மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., ” திருச்சி மாநகராட்சி 5வது மண்டலத்திற்குட்பட்ட உறையூரில், பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் வண்ணாங்கோவில் தொக்கு எடுத்தல் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், குழந்தை சுயநலவின்றி காணப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு வயிறு தொக்கு நீக்குதல் சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரிகிறது. எனவே குழந்தை இறப்பிற்கு கழிவுநீர் கலப்பு காரணம் அல்ல. மேலும், இப்பகுதியில் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.எனவே, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாகனம் மூலம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீரில் தொற்று ஏதுமில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அல்லாத பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வாந்தி வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ளதால், திருவிழாக்களில் வழங்கப்பட்ட அன்னதான உணவுகள் காரணமாக இருக்கலாம். எனவே, மாநகராட்சி பகுதிகளில் வயிற்றுப்போக்கு உடனான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.