பக்தர்கள் வெள்ளத்தில் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்…! (புகைப்படங்கள் இணைப்பு)
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட திருவிழா ஏப்ரல் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உற்சவர் அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(15-04-2025) காலை தொடங்கியது. இதையொட்டி காலை 10-31 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மேளதாளங்கள், அதிர்வேட்டுகள் முழங்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே கோவிலில் குவிந்தனர். இன்று அதிகாலை முதலும் பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர்.
பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. ஓம் சக்தி.. பராசக்தி கோஷம் விண்ணதிர பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள், குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், வாகனப் போக்குவரத்தை சீர்படுத்தவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கூட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், பழங்களும், மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 18-ம் தேதி தெப்பத்தில் சமயபுரம் உற்சவர் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 22 ம் தேதி சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது.
Comments are closed.